TODAY NEWS
Search

அரசு பங்களா சேதமடைந்த விவகாரம்: பாஜ.வின் சதி என அகிலேஷ் குற்றச்சாட்டு

,

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தான் காலி செய்த அரசு பங்களா சேதமடைந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பாஜ அரசின் சதி என்று அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.முன்னாள் முதல்வர்கள் தங்களது அரசு பங்களாக்களை காலி செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேத்தின் எஸ்டேட் துறை கொடுத்த நோட்டீசை அடுத்து, அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 5 முன்னாள் முதல்வர்கள் தங்களது அரசு பங்களாக்களை காலி செய்துள்ளனர். உடல்நலக்குறைவால் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி மட்டும் தன்னுடைய அரசு பங்களாவை காலி செய்யவில்லை.இந்நிலையில், அகிலேஷ் யாதவ் காலி செய்த அரசு பங்களாவில் இருந்த விலை உயர்ந்த ஏசி, பாத்டப், தண்ணீர்குழாய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றுவிட்டதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பங்களா சேதப்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்டேட் துறை உயரதிகாரி யோகேஷ் குமார் சுக்லா தெரிவித்திருந்தார்.இதனிடையே, தான் குடியிருந்த அரசு பங்களா சேதப்படுத்தப்பட்டது என்று கூறப்படுவது பாஜவின் சதி என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், “இடைத்தேர்தல்களில் அடைந்த தொடர் தோல்விகள் பாஜவை அச்சமடைய செய்துள்ளது. அதனால்தான் அரசு பங்களா சேதமடைந்துள்ளதாக வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது பாஜவின் சதி” என்று தெரிவித்துள்ளார்.அகிலேஷ் யாதவின் புகழ் தொடர்ந்து உயர்ந்து வரும்நிலையில் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சியும் குற்றம் சாட்டியுள்ளது.இந்நிலையில், அரசு பங்களா சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், அகிலேஷ் யாதவின் ஏமாற்றம் வெளிபட்டுள்ளதாக பாஜ குற்றம் சாட்டியுள்ளது. அகிலேஷ் யாதவ் காலி செய்த அரசு பங்களா சேதமடைந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து உத்தரப் பிரதேச ஆளுநர் ராம்நாயக், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அகிலேஷ் யாதவ் இந்த விவகாரத்தில் தற்பொழுது வாய் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

,

Advertisement