இரட்டை இலை ஒதுக்கீடு வழக்கு மே 21க்கு விசாரணை ஒத்திவைப்பு : டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

,

புதுடெல்லி : இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணைய உத்தரவிற்கு எதிராக டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கை மே 21ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவைகளை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவிற்கு எதிராக டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி தரப்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டதாவது: அதிமுகவில் முறையாக பொதுக்குழு கூட்டப்பட்ட பின்னர் தான் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதேபோல் எங்களது அணி தரப்பில் 90 சதவீத உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் எங்களது அணிக்கு வழங்கப்பட்டது என தெரிவித்து வாதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து வழக்கு வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்றைய தினம் துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதிடுகிறார்.

,

Advertisement