TODAY NEWS
Search

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த உத்தரவிட முடியாது: தமிழக அரசு, மருத்துவ கவுன்சில் பதிலளிக்க வேண்டும்

,

புதுடெல்லி : ‘நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக கலந்தாய்வை நடத்த உத்தரவிட முடியாது. இந்த மனுவுக்கு தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் மீண்டும் பதிலளிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வை நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் நேற்று முன் தினம் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அதை அவசர வழக்கமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதித்தது. அதன்படி, இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு நேற்று காலை விசாரித்தது.  அப்போது, ‘நீட் தேர்வு பற்றி மருத்துவ கவுன்சிலின் நிலைபாடு என்ன?’ என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர், ‘‘நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு காலக்கெடு வழங்க கூடாது. தமிழக அரசின் செயல்பாட்டில் மருத்துவ கவுன்சிலுக்கு உடன்பாடில்லை. அதனால், மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அளிக்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசு சரியான சட்ட விதிகளை பின்பற்ற தவறிவிட்டது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கலந்தாய்வை நடத்த உத்தரவிட்டும் அதை தொடங்காமல் தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்கக் கூடியதல்ல’’ என்று கூறினார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ கலந்தாய்வை தமிழக அரசு ஏன் இதுவரை தொடங்கவில்லை? இதற்காக தமிழக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது?’’ என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக  மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்க அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.  இந்த விசாரணை பிற்பகல் மீண்டும் நடந்தபோது, மத்திய தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு பதிலாக மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் துஷோர் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அதில், “நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு வரும் 22ம் தேதிக்குள் அதாவது அடுத்த செவ்வாய் கிழமைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க உள்ளது. மேலும், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு தற்போது கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளதால் உச்ச நீதிமன்றத்தால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’’ என அவர் கூறினார். இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த மருத்துவ கவுன்சில், “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில்  நீட் தேர்வு எழுதிய 82 ஆயிரம் மாணவர்களில் 32 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்’’ என கூறியது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நீட் தேர்வு அடிப்படையில்  கலந்தாய்வை நடத்தாமல் தமிழக அரசு தாமதம் செய்து வருவது ஏன்? ஒருவேளை, தமிழக அரசின் அவசரச் சட்டம் நடைமுறை படுத்தப்படும் பட்சத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் நிலை என்னவாகும்? அதனால், நீட் தேர்வு விவகாரத்தில் கிராமப்புற மாணவர்கள் மற்றும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிக்காதவாறு அரசு எடுக்கும் முடிவுகள் இருக்க வேண்டும். மேலும், நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக கலந்தாய்வு நடத்தும்படி எந்த உத்தரவையும் இப்போது பிறப்பிக்க முடியாது. அடுத்த விசாரணை வரையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்’’ என கூறிய நீதிபதிகள், விசாரணையை வரும் செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைத்தனர். அன்றயை தினம் நீட் தேர்வு குறித்து தமிழக அரசும்,  மருத்துவ கவுன்சிலும் மீண்டும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

,

Advertisement