ஏழுமலையான் நகைக்கு பாதுகாப்பில்லை என தெரிவித்ததால் 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கும் முடிவு பழிவாங்கும் நடவடிக்கை

,

திருமலை: ஏழுமலையானின் நகை, சொத்துக்கு பாதுகாப்பில்லை என கருத்து தெரிவித்ததால், 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கும்  முடிவு பழிவாங்கும் நடவடிக்கை என்று திருப்பதி கோயில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு கூறினார். திருமலை அன்னமய்யா பவனில் திருப்பதி  ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி மற்றும் திருமலையில்  உள்ள தேவஸ்தான  கோயில்களில் 65 வயதிற்கு மேல் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களுக்கு பணி ஓய்வு வழங்கினால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால்  தலைமை அர்ச்சகர்களான ரமண தீட்சிதலு, நரசிம்ம தீட்சிதலு, நாராயண தீட்சீதலு, சீனிவாச தீட்சிதலு உட்பட 15 பேருக்கு கட்டாய ஓய்வு வழங்க  முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தெரிவித்தார்.இதுகுறித்து, ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு  1996ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வம்ச பாரம்பரிய அர்ச்சகர்களுக்கு அவர்கள் பயன்பெற்று வரும் லாபத்தை மட்டும் ரத்து  செய்வதாகவும், அவர்கள் செய்யும் பூஜைகள், வழங்கப்படும் மரியாதைகள், ஊக்க தொகை வழக்கம்போல் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் அதனை கருத்தில் கொள்ளாமல் வம்ச பாரம்பரிய அர்ச்சகர்களை தேவஸ்தான ஊழியர்களைபோல் பணி இடமாற்றம்,  பணி நீக்கம், கட்டாய ஓய்வில் அனுப்புவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.என்னை பழிவாங்கும் நடவடிக்கையாக தேவஸ்தான அதிகாரிகள் வம்ச பாரம்பரிய அர்ச்சகர்களான 15 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப உள்ளதாக  தெரிவித்துள்ளனர். இதனை சட்டப்படி சந்திக்க உள்ளோம். தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எனக்கு வழங்குவதாக கூறியுள்ள நோட்டீசுக்கு  சட்டப்படி உரிய பதில் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். புதிய அறங்காவலர் குழு பதவியேற்று நடந்த முதல் கூட்டத்திலேயே தலைமை  அர்ச்சகர் உட்பட 15 அர்ச்சகர்களை கட்டாய பணி ஓய்வில் அனுப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது மற்ற அர்ச்சகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

,

Advertisement