கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மஜத கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு : குலாம்நபி ஆசாத் தகவல்

,

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மஜத கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு  அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத்  கூறினார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் கடந்த 12ம் தேதி நடந்தது.  தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் யாருக்கும் தனி  பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், பாஜ மற்றும் மஜத ஆகிய கட்சிகள்  தனித்து ஆட்சி அமைப்பதற்கு இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மஜதவுக்கு  ஆதரவு அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இது தொடர்பாக ஐக்கிய  முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி மாநில தலைவர்களுடன் அவசரமாக ஆலோசனை  நடத்தினார். இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், குலாம்நபி ஆசாத் ஆகியோர்  முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகன் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். முன்னாள் பிரதமர் தேவகவுடா காங்கிரசின் ஆதரவை ஏற்றுக்கொள்வதாக  சோனியா காந்தியிடம் தெரிவித்ததை தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்  பரமேஸ்வர், முதல்வர் சித்தராமையா ஆகியோர் வெளிப்படையாக மஜதவுக்கு ஆதரவு  அளிப்பதாக கூறினர். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர்  நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் எந்த  கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்களின் தீர்ப்பை நாங்கள்  ஏற்றுக்கொள்கிறோம். அதே நேரத்தில் மதவாத கட்சியான பாஜ ஆட்சியில்  அமரக்கூடாது என்பது காங்கிரசின் நோக்கமாகும். காங்கிரஸ் மேலிடத்தின்  தீர்மானமும் அதுதான். எனவே, கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க மஜதவுக்கு  ஆதரவு அளிக்கிறோம் என்றார்.  காங். மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத்  கூறுகையில், ‘‘சோனியா காந்தி கூறியபடி, தேவகவுடா மற்றும் குமாரசாமி  ஆகியோரிடம் காங்கிரசின் ஆதரவை தெரிவித்துள்ளோம். எவ்வித நிபந்தனையும் இன்றி  மஜதவுக்கு அதரவு அளித்துள்ளோம் என்றார். முதல்வர் சித்தராமையா  கூறுகையில், ‘‘மஜத ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று மேலிடம்  முடிவு எடுத்தது. மேலிடத்தின் உத்தரவின்படி மஜதவுக்கு ஆதரவு அளிக்கிறோம்’’  என்றார்.

,

Advertisement