TODAY NEWS
Search

காஜியாபாத், ஹபூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு : டிஐசிக்கு என்ஜிடி புது உத்தரவு

,

புதுடெல்லி : தொடர்ந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நீர் மட்டம் சரிந்து வருவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், காஜியாபாத் மற்றும் ஹபூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை பட்டியல் விவரங்களை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. காஜியபாத்தில் வசிக்கும் சுஷில் ராகவ், தன்னார்வலர் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்(என்ஜிடி) மனு ஒன்று தாக்கல் செய்தனர். அதில், காஜியாபாத் மற்றும் ஹபூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் வளத்தை சுரண்டி வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடும் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே நடந்து வருகிறது. நேற்று மீண்டும் நீதிபதி ரகுவேந்திர எஸ் ரதோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மேற்கூறப்பட்ட இரு மாவட்டங்களில் இயங்கி வரும் சட்டவிரோத போர் கிணறுகளின் பட்டியலை நீதிபதியிடம் சமர்பித்தனர்.தொழிற்சாலைகளின் இந்த சட்டவிரோத நிலத்தடி நீர் சுரண்டலால், காஜியாபாத்(போஜ்பூர், லோனி, முரத்நகர் மற்றும் ராஜாபூர் பிளாக்கள்) மற்றும் ஹபூர்(கார்க், ஹபூர் மற்றும் சிம்பாலி பிளாக்கள்) மாவட்டங்களில் கைப்பம்புகள், கிணறுகள் வறண்டு வருகின்றன. ஆகையால் அவ்விரு மாவட்டங்களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரினை சுரண்டி, நீர் மட்டம் குறைய செய்யும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடவேண்டும்’ என்று கூறினர்.இந்த விவகாரத்தில் ஏற்கனவே மேற்கூறப்பட்ட இரு மாவட்டங்களின் பல்வேறு தொழிற்சாலைகள் பட்டியலை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தும், அலட்சியப்போக்குடன் செயல்படும் மாவட்ட தொழிற்சாலைகள் நிர்வாகங்களை(டிஐசி) கண்டித்த நீதிபதி பின்னர் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: இரு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் பட்டியலை தாக்கல் செய்ய ஏற்கனவே பல்வேறு உத்தரவு பிறப்பித்திருந்தும், டிஐசி இன்னும் சமர்பிக்கவில்லை. பட்டியலை தாக்கல் செய்ய டிஐசிக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதனை அடுத்த விசாரணை தேதியான ஏப்ரல் 25ம் தேதி தாக்கல் செய்யாவிடில், நாளொன்று 5,000 என பட்டியல் தாக்கல் செய்யும் வரை அபராதமாக வசூலிக்கப்படும் என்று கூறி உத்தரவிட்டார்.

,

Advertisement