TODAY NEWS
Search

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை இன்று தாக்கல்

,

புதுடெல்லி: அன்னிய  நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  அவர் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் என்ற தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ.3 ஆயிரத்து 500 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் நிதி நிறுவன முறைகேட்டு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சட்ட விரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து அது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அதிரடியாக முடக்கியது. இது தொடர்பாக டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.  வழக்கை விசாரித்த நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் தர மறுத்து ஜூலை 10ம் தேதி வரை கார்த்தியை கைது செய்ய தடை விதித்து கடந்த மாதம் 3ம் தேதி உத்தரவிட்டிருந்தது. நேரடி வெளிநாட்டு முதலீட்டின் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடந்துள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில், அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த குற்றப்பத்திரிகை, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

,

Advertisement