TODAY NEWS
Search

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதியானது : நீதிபதிகள் கருத்து

,

புதுடெல்லி: நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றும், இதுகுறித்து விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இரு மாநிலத்தின் அசைவுகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரும் என நேற்றைய விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக இறுதிக்கட்ட வழக்கு விசாரணை கடந்த ஜூலை 11ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே தொடர்ந்து வாதிட்டு வருகிறார். இதில் இதுவரை, ‘தமிழகத்திற்கு தண்ணீர் தரும் விவகாரத்தில் கர்நாடகா காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்றும், கர்நாடகா அரசு எக்காரணத்தை கொண்டும் அதன் மாநில எல்லையில் உள்ள எந்த ஒரு பகுதிக்குள்ளும் அணைக்கட்டவோ அல்லது அதற்குண்டான முயற்சிகளையோ மேற்கொள்ளக்கூடாது’ என்ற வாதங்களை முன் வைத்தார். இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள் 30ம் தேதியோடு காவிரி தொடர்பான வழக்கில் தமிழகம் தனது இறுதி வாதங்களை முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காவிரி தொடர்பான வழக்கு 19வது நாளாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வழக்கறிஞர் சேகர் நாப்தே வாதிடுகையில், ‘நதிநீர் பங்கீடு விவகாரத்தை பொருத்தவரையில் காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்ட ஒப்புக்கொள்ளவே முடியாது. கர்நாடகா ஆரம்பத்தில் இருந்தே அம்மாநில நீரின் தவறான புள்ளி விவரங்களை தெரிவித்து வருகிறது. ஆனால் இதனை கண்டிக்க வேண்டிய மத்திய அரசு தமிழகத்திற்கு மட்டும் பாரபட்சம்காட்டி சட்டத்தின் கடமையை செய்ய தவறி விட்டது. காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பையே மதிக்க தவறிய கர்நாடகாவின் பேச்சை எப்படி தமிழகத்தால் நம்ப முடியும்?’ என்று வாதிட்டார்.இதையடுத்து நீதிபதி கூறியதாவது: காவிரியில் புதிய அணைக்கட்ட தமிழகம் ஏன் ஒப்புக்கொள்ளக்கூடாது? அவ்வாறு கட்டப்படும் அணையில் இருந்து கிடைக்கும் கூடுதல் நீரை இரு மாநிலங்களும் வறட்சி காலத்தில் பயன்படுத்தலாம். மேலும், கூடுதல் நீரை பயன்படுத்துவதை கண்காணிக்க புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து செயல்படுத்தலாம். நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம், கர்நாடக அரசை நம்பாவிட்டாலும் உச்ச நீதிமன்றத்தை முழுமையாக நம்பி செயல்படலாம். மேலும் காவிரி நீர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இறுதிவரை உச்ச நீதிமன்றம் தான் விசாரணை மேற்கொள்ளும். அதனால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியான தீர்ப்பாகும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இதைத்தொடர்ந்து, ‘தமிழகத்தில் ஏன் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக வக்கீல், ‘தமிழகத்தை பொருத்த மட்டில் நிலத்தடி நீர் என்பது 20 டிஎம்சி அளவுதான். ஆனால் அதையும் நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது தமிழக விவசாயத்தின் தன்மை. அதனால் இதில் தொடர்ந்து நிலத்தடி நீரை பயன்படுத்தினால் இயற்கைக்கும், மண் வளத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு விவசாயம் அழிந்துவிடும்’ என தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதிகள், ‘காவிரி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இரு மாநிலங்களின் அசைவுகளையும் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரும்’ என தெரிவித்தனர். இதையடுத்து 20வது நாளாக இன்றும் காவிரி நதிநீர் பங்கீட்டின் இறுதி விசாரணை நடைபெறவுள்ளது.

,

Advertisement