TODAY NEWS
Search

குஜராத் கலவரத்தில் ஒரே இடத்தில் 97 பேர் கொலை பாஜ முன்னாள் அமைச்சர் விடுதலை: அகமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

,

அகமதாபாத்: குஜராத் கலவரத்தில் ஒரே இடத்தில் 100 பேரை கொன்ற வழக்கில் தண்டணை பெற்ற பாஜ முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானியை விடுதலை செய்து அகமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 இந்துக்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இதனால், குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது.  பிப்ரவரி 28ல் நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில், 97 முஸ்லிம்கள் ஒரே இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் மகப்பேறு மருத்துவரும், எம்எல்ஏ.வுமான மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 69 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், மாயா கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 8 பேருக்கு 31 ஆண்டுகளும், 22 பேருக்கு 24 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஹர்ஷா தேவானி, ஏ.எஸ். சுபேகியா ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர். கலவர வழக்கில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்பட 12 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டனர். அவர் மீதான குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதேவேளையில், பாபு பஜ்ரங்கியின் சாகும் வரை ஆயுட்கால சிறை தண்டனையை 21 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. * 2002 கலவரத்தில் மாயா கோட்னானி துப்பாக்கி மற்றும் வாளால் தாக்கியதை பார்த்ததாக 11 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். இதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.* காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட  மாயாவுக்கு 2014ல் ஜாமீன் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.* நரோடா கிராமத்தில் 11 முஸ்லிம்களை கொன்றதாகவும் மாயா மீது இன்னொரு வழக்கு உள்ளது. * இந்த வழக்கு விசாரணையின் போது பாஜ தலைவர் அமித் ஷா ஆஜராகி சாட்சியம் அளித்தார். கலவரம் நடந்த அன்று மாயாவை சட்டப்பேரவையிலும், அதன்பின் மருத்துவமனையிலும் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.வழக்கை விசாரிக்க மறுத்த 6 நீதிபதிகள்மாயா கோட்னானியின் மேல்முறையீடு மனுவை அகமதாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அகில் குரேஷி, எம்.ஆர். ஷா, கே.எஸ். ஜாவேரி, ஜி.பி ஷா, சோனியா கோக்கானி, ஆர்.எச் சுக்லா உள்ளிட்ட சில நீதிபதிகள் விசாரிக்க மறுத்து விட்டனர். இறுதியாக நீதிபதிகள் ஹர்ஷா தேவானி, ஏ.எஸ் சுபேகியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.அமைச்சராக்கிய மோடிமாயா கோட்னானி மருத்துவம் படித்தவர். பெண்ணியல் மற்றும் மகப்பேறு மருத்துவராக திகழ்ந்தவர். 1995ல் அகமதாபாத் உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கி வெற்றி பெற்றார். அதன்பின் நரோடா சட்டப்பேரவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார். 1998ல் 75 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும், குஜராத் கலவரத்துக்கு பின் நடந்த 2002 சட்டப்பேரவை தேர்தலில் 1.10 லட்சம் ஓட்டு வித்தியாசத்திலும், 2007 சட்டப்பேரவை தேர்தலில் 1.80 லட்சம் ஓட்டு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். 2007ல் அவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவியை அப்போதைய குஜராத் முதல்வர் மோடி வழங்கினார். 2009ல் கே.டி ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை படையால் தேடப்பட்ட அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

,

Advertisement