TODAY NEWS
Search

கேரளாவில் நிலச்சரிவில் 6 பேர் பலி

,

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட  நிலச்சரிவில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். திருச்சூரில் மரக்கிளை முறிந்து  விழுந்து ஒருவர் இறந்தார்.கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம்,  எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்  கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த  நிலையில் கோழிக்கோடு தாமரச்சேரி, மலப்புரம் மாவட்டம் எடவண்ணா, கரிஞ்சோலை,  காரசேரி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.இதில்  வீடுகள் மண்ணுக்கு அடியில் புதைந்தன. இதில் தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்த  அப்துல் சலீம் மகள் பில்னா (9), அவரது தம்பி முகமது ஷஹபாஸ் (3), இவர்களது  உறவினர் ஜாபர் மகன் முகம்மது ஜாசிம் (5), அப்துல் ரகுமான் (60), ஹசன்,  இவரது மகள் ஹன்னத் ஆகிய 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல்  அறிந்ததும் தாமரச்சேரி போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு சிறப்பு படையினர்  விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.திடீர் நிலச்சரிவால்  கோழிக்கோடு – வயநாடு இடையே சாலை போக்குவரத்து முற்றிலுமாக  துண்டிக்கப்பட்டது. திருச்சூரில் பெய்த கனமழையில் மரக்கிளை முறிந்து விழுந்து கொடுங்கல்லூரை சேர்ந்த  சுரேஷ் (55)  இறந்தார்.இதற்கிடையே  இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து  அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷாராக இருக்க வேண்டுமென மாநில அரசு  அறிவுறுத்தி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் உள்பட  மலையோர பகுதிகளுக்கோ, கடற்கரைக்கோ செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்  கொள்ளப்பட்டனர்.

,

Advertisement