TODAY NEWS
Search

கோச்சடையான் பட விவகாரம் : லதா ரஜினிகாந்த் கடனை திருப்பி செலுத்தியே தீர வேண்டும் : இடைக்கால மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

,

புதுடெல்லி: கோச்சடையான் படத்திற்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் வாங்கிய கடன் தொகையை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்தியே தீர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்த கோச்சடையான் படம் கடந்த 2014ம் ஆண்டு மே 23ம் தேதி வெளியானது. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கினார். இப்படத்தை வெளியிடுவதற்கு முந்தைய தயாரிப்பு பணி மற்றும் வெளியீட்டு பொறுப்புக்கான உரிமம் பெங்களூருவை சேர்ந்த ஆட் பீரோ அட்வர்டைசிங் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து வெளியீட்டு உரிமத்திற்காக மேற்கண்ட நிறுவனத்திடம் இருந்து மொத்த கடன் தொகையாக ரூ.14.9 கோடியை பெற்றுக்கொண்டு, ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற வேறு ஒரு நிறுவனத்துக்கு உரிமத்தை மாற்றி வழங்கி விட்டதாக லதா ரஜினிகாந்த் மீது மேற்கண்ட நிறுவனம் புகார் தெரிவித்தது. மேலும், வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிக்காக லதா ரஜினிகாந்த் மூலம் போடப்பட்ட ஒப்பந்தத்தில் மொத்தத்தொகையில் ரூ.6.2 கோடி ரூபாயை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் ஆட் பீரோ நிறுவனத்தார் புகாரில் குறிப்பிட்டனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தொகையை திருப்பித்தரும் வரையில் லதா ரஜினிகாந்த் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளையும் பதிவு செய்யக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது.இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஆர் பீரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக ஆட் பீரோ நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.6.2கோடி கடன் தொகையை கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போதைய தேதிவரை வட்டி விகிதத்தோடு சேர்த்து அடுத்த 12 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்என லதா ரஜினிகாந்திற்கு உத்தரவிட்டது.இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினிகாந்த் தரப்பில் நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில்,”ஆட் பீரோ நிறுவனத்திடம் வாங்கிய மொத்த கடனில் பெரும்பாலான தொகை திருப்பி செலுத்தி விட்டோம். அதில் மீதம் ரூ.80லட்சம் மட்டுமே நிலுவையாக இருக்கிறது. அந்த பணத்திற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என தெரிவித்தனர். இதற்கு ஆட் பீரோ நிறுவனம் கடும் ஆட்சேபனை தெரிவித்தது.இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,” ஆட் பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் வாங்கிய கடன் விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி கண்டிப்பாக ஜூலை 3ம் தேதிக்குள் நிலுவை தொகையை வட்டியுடன் லதா ரஜினிகாந்த் ஆட் பீரோ நிறுவனத்திடம் திருப்பி செலுத்தியே ஆக வேண்டும். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது என கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் லதா ரஜினிகாந்த தாக்கல் செய்த இடைக்கால மனுவை நிராகரித்து நேற்று உத்தரவிட்டனர்.

,

Advertisement