TODAY NEWS
Search

சர்வதேச எல்லையில் பாக். தாக்குதல் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் பலி

,

ஸ்ரீநகர், ஜூன் 14: காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம்  நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர்.  காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச எல்லையில் உள்ள ஜம்மு, கதுவா, சம்பா மாவட்டங்களில் கடந்த மாதம் தொடர்ந்து குண்டுகள் வீசியதால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை 12 பேர் இந்த தாக்குதலில் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த மே 29ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் ராணுவ செயல் பிரிவு இயக்குனர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்க  இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், கடந்த 4ம் தேதி இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையிலும் எல்லையில் அமைதியை கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.  ஆனால், பாகிஸ்தான் இதையும் மீறி எல்லையில் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. கடந்த 3ம் தேதி பிராக்வால், கனாசாக், கவுர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். மேலும், பொதுமக்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக சம்பா மாவட்டத்தில் ராம்கர் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் 10.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது. இது நேற்று அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி கமாண்டன்ட் அதிகாரி உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் காயமடைந்தனர்.

,

Advertisement