TODAY NEWS
Search

சிறுமிகள் பலாத்கார குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர பரிசீலனை: உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல்

,

புதுடெல்லி: சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சிறுவர்கள் பாலியியல் குற்ற பாதுகாப்பு சட்டம் (போக்சோ) சட்டத்தில் அவசர சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவையில் இன்று தீவிர பரிசீலனை நடைபெற இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது. காஷ்மீர் மாநிலம் கதுவா, உ.பி.மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமி மற்றும் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அதையடுத்து, சிறுமிகள் மீதான பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வேண்டும் எனும் கோஷம் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. அதே கோரிக்கையை மற்றும் பெண்கள் மீதான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி 9வது நாளாக போராடி வருகிறார்.சிறுமி பலாத்கார குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதிக்கும் சட்டத் திருத்த தீர்மானம் மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் முதல் முறையாக நிறைவேறியது. வடமேற்கு டெல்லியின் நேதாஜி சுபாஸ் பிளேஸ் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 8 மாத குழந்தையை பலாத்காரம் செய்த உறவினர் மீதான குற்றச்சாட்டு வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ எம் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ‘‘போக்சோவில்  அவசர சட்டத் திருத்தம் கொண்டுவர சட்ட அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மத்திய அமைச்சரவையில் இன்று இந்த விவகாரத்தில் தீவிர ஆலோசனை நடைபெறுகிறது’’ என கூறப்பட்டு இருந்தது.அதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் அறிவித்தனர். அவசர சட்டதிருத்தம் செய்யப்பட வேண்டும் எனும் அளவிற்கு, விவகாரம் முற்றியுள்ளது. அவசர சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் ஜூலை வரை காத்திருக்க வேண்டும் என சட்ட அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

,

Advertisement