TODAY NEWS
Search

சிறுமிகள் பலாத்கார சம்பவங்களை தடுக்க குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

,

புதுடெல்லி : கதுவா மற்றும் உன்னாவ் பலாத்கார சம்பவங்கள் நாட்டை உலுக்கி எடுத்துள்ள நிலையில், சிறுமிகள் பலாத்கார சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை வழங்கும் சட்ட திருத்தத்தை சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார். தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழி செய்ய வேண்டும் என கோரி டெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் ராஜ்காட்டில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு நேரில் சென்று மாலிவாலுக்கு ஆதரவு தெரிவித்து கெஜ்ரிவால் பேசியதாவது: டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது கவலையாக உள்ளது. இந்தியன் என்ற முறையில் நாட்டின் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என குறிக்கோள் உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மகளிர் ஆணையத் தலைவர் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடத்தி வரும் அவரது போராட்டத்திற்கு தோள் கொடுப்பேன். சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படும் சட்ட திருத்த தீர்மானத்தை சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் நிச்சயமாக நிறைவேற்றுவேன் என மாலிவாலுக்கு உறுதி அளிக்கிறேன்.பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான தாக்குதல்களில் அவர்களுக்கு 6 மாதத்திற்குள் உரிய நீதி கிடைக்கும் வகையில், விரைவு நீதிமன்றங்கள் துவங்கவும், அதற்கு நீதிபதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கிறேன். டெல்லி அரசு அனுபவித்து வரும் சோதனைகளை போலவே, சட்டப்பேரவைக்கும் பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. பேரவையில் நிறைவேறும் தீர்மானங்களுக்கு மத்திய அரசின் அனுமதிக்காக கைகட்டி காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பேரவையில் நிறைவேறிய தீர்மானங்களில் ஒன்று கூட மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. பெண்களின் பாதுகாப்பைக் கருதி, மரண தணடனை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என இப்போதே கேட்டுக் கொள்கிறேன். கதுவா, உன்னாவ் பலாத்கார சம்பவங்கள் மூலமாக பாஜ அரசு மக்களுக்கு அபாயகரமான தகவலை தெரிவித்து உள்ளது. குற்றவாளி பாஜவைச் சார்ந்தவராக இருந்தால், மத்திய அரசும் அந்த கட்சியில் எப்பாடு பட்டாவது அவரை பாதுகாப்பது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றது எனும் அபாய தகவலை மக்களுக்கு பாஜ உணர்த்தி உள்ளது. பாஜ எம்எல்ஏ பலாத்காரம் செய்திருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜவால் பாதுகாக்கப்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சிறையில் அடைத்துள்ளது அங்குள்ள பாஜ அரசு. சிறையில் அவர் மர்மமாக இறந்தும் போயிருப்பது கொடுமையான வேதனை. கதுவாவின் புனித தலத்தில் வைத்து சிறுமியை சீரழித்து கொலை செய்துள்ளவர்கள் தங்கள் இந்துக்கள் என கூறிக்கொள்வது வெட்கக்கேடு. இவ்வாறு கெஜ்ரிவால் உரையாற்றினார்.“நாட் இன் மை நேம்” பேரணிகதுவா மற்றும் உன்னால் பலாத்கார சம்பவங்களுக்கு பிறகு, தலித் மற்றும் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்வவங்களை கண்டித்து நேற்று நாடாளுமன்ற சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு “நாட் இன் மை நேம்” என்ற பெயரில் கண்டன பேரணி நடத்தினர். இதில் கலந்து கொண்ட கலைஞர்கள், மாணவர்கள் கோஷம் எழுப்பி தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் கூறுகையில், முஸ்லிம்கள் இந்த நாட்டில் அச்சத்துடன் வாழ்கின்றனர். தலி்த் மற்றும் ஆதிவாசிகளின் உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

,

Advertisement