TODAY NEWS
Search

ஜெயநகரில் சவுமியா வெற்றி கர்நாடகாவில் காங். பலம் 79 ஆனது

,

பெங்களூரு : பெங்களூரு  ஜெயநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளர்  சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார். இதன்  மூலம் பேரவையில் காங்கிரஸ் பலம் 79 ஆக  உயர்ந்துள்ளது. கர்நாடக  சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் கடந்த மே மாதம்  12ம் தேதி நடந்தது. தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டு பிரசாரத்தில் அரசியல்  கட்சிகள் தீவிரமாக ஈடுபட்ட  நிலையில் பாஜ வேட்பாளர் விஜயகுமார் மரணம்  அடைந்தார். இதைத்தொடர்ந்து  ஜெயநகர் தொகுதிக்கான தேர்தல் தேதி தள்ளி  வைக்கப்பட்டு ஜூன் 11ம் தேதி  நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் சவுமியா  ரெட்டி, பாஜ சார்பில் பிரகலாத் பாபு  மற்றும் சுயேச்சையாக ரவிகிருஷ்ண  ரெட்டி, கராத்தே ஸ்ரீகாந்த் உள்பட மொத்தம் 19  பேர் போட்டியிட்டனர். இதில்  பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா  ரெட்டிக்கு 54,475 வாக்குகளும், பாஜ  வேட்பாளர் பிரகலாத் பாபுவுக்கு  51,568 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் 2,889  வாக்குகள் வித்தியாசத்தில்  சவுமியா ரெட்டி வெற்றி பெற்றார். நோட்டாவுக்கு  808 வாக்குகளும்,  சுயேட்சையாக போட்டியிட்ட ரவிகிருஷ்ணரெட்டிக்கு 1,861  வாக்குகளும்  கிடைத்தன. மஜத சார்பில் போட்டியிட்ட காளேகவுடா கட்சி தலைமை   உத்தரவை ஏற்று தேர்தலில் இருந்து ஒதுங்கி கொண்டிருந்தாலும், இவிஎம்   இயந்திரத்தில் அவர் பெயர் இருந்ததால், அவரின் ஆதரவாளர்கள் 817 பேர்   வாக்களித்துள்ளனர். சவுமியா ரெட்டி வெற்றி பெற்றதின் மூலம் மாநில   சட்டப்பேரவை வரலாற்றில் அப்பா-மகள் இருவரும் உறுப்பினராக இருக்கும்  வாய்ப்பு  கிடைத்துள்ளது. சவுமியா ரெட்டி வெற்றி பெற்றதை காங்கிரஸ்  தொண்டர்கள் பட்டாசு  வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இந்த  வெற்றியின் மூலம் பேரவையில் காங்கிரஸ் பலம் 79 ஆக உயர்ந்துள்ளது.   ராம்நகரம் தொகுதி உறுப்பினர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்துள்ளதாலும், சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் ஜமுகண்டி தொகுதி உறுப்பினராக இருந்த   சித்துநியாம கவுடா உயிரிழந்ததாலும் இரு தொகுதிகள் காலியாக உள்ளன. இரு தொகுதிக்கும் வரும் ஜூலை மாதம் தேர்தல் நடக்கும் என்று   எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகள் தலா ஒரு இடத்தில் வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்புள்ளது.

,

Advertisement