தந்தையை போல மகனுக்கும் வாய்ப்பு…38 இடங்களை மட்டும் பிடித்த குமாரசாமிக்கு ‘ராஜயோகம்’ : முதல்வர் பதவி தானாக தேடி வந்த அதிசயம்

,

தேவகவுடாவை பிரதமர் பதவி தானாக தேடி வந்தது போல, மகனுக்கும்  முதல்வர் பதவி தானாக தேடி வந்துள்ளது. வெறும் 38 இடங்களை மட்டுமே பிடித்த  குமாரசாமிக்கு ராஜயோகம் அடித்துள்ளது. தேசிய அரசியலை பொறுத்தவரை  முன்னாள் பிரதமர் தேவகவுடா தவிர்க்க முடியாத புள்ளியாக கருதப்படுகிறார்.  அதுபோல் மாநில அளவில் தான் ஒரு தவிர்க்க முடியாத நபர் என்பதை குமாரசாமி  பலமுறை நிரூபித்துள்ளார். மாநகராட்சி தேர்தல் என்றாலும், பஞ்சாயத்து  தேர்தல் என்றாலும் பதவி யாருக்கு என்பதை குமாரசாமி நிர்ணயம் செய்கிறார்.  கடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜவுக்கு 101 இடங்களில் வெற்றி கிடைத்தாலும்  காங்கிரஸ் கட்சி மஜதவின் ஆதரவை நாடியது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி  நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை மஜத கேட்டு பெற்றது என்பதுடன், நினைத்த  அனைத்து காரியத்தையும் மஜத சாதித்து வருகிறது. அதுபோல் தற்போது  நடந்து முடிந்த தேர்தலிலும் பாஜவுக்கு 104 இடத்தில் வெற்றி கிடைத்தாலும்  தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 113  உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவினர் அந்த மேஜிக் நம்பரை  கைப்பற்றுவது எப்படி என்று கையை பிசைந்து கொண்டிருந்தனர். இதை தமக்கு  சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரசார், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்  கதவை தட்டினர். ஆட்சி அமைப்பதற்கு மஜதவின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும்  என்பதை முன்கூட்டியே உணர்ந்து அமைதியாக காத்திருந்த குமாரசாமி மற்றும்  தேவகவுடா ஆகியோர் காங்கிரசின் முடிவை ஏற்றுக்கொண்டனர். தேவகவுடாவுக்கு  1996ல் எப்படி பிரதமர் பதவி கிடைத்ததோ அதே அதிர்ஷ்டம் குமாரசாமிக்கும்  கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் 38 இடத்தில் மஜதவுக்கு வெற்றி  கிடைத்தாலும்  காங்கிரசின் நிபந்தனை இல்லாத ஆதரவின் காரணமாக மாநில  முதல்வராகும் வாய்ப்பு குமாரசாமியின் வீட்டு வாசல் கதவை தட்டியுள்ளது.  ஆட்சி அமைப்பதற்காக மஜதவின் ஆதரவை காங்கிரஸ், பாஜ கேட்கும் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குமாரசாமிக்கு முதல்வர் வாய்ப்பு தானாகவே  கிடைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ‘பந்து’  இப்போது ஆளுநர் வளாகம் என்ற களத்தில் இருக்கிறது. ஆளுநர் எடுக்கும் முடிவை  பொறுத்து குமாரசாமி தலைமையில் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா என்பது தெரியும். இதனால் மாநில மக்கள் அனைவரின் கவனமும் ஆளுநர் மாளிகையை நோக்கியே  இருக்கின்றன.

,

Advertisement