தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி அனுமதி : உச்ச நீதிமன்றம் உத்தரவு

,

புதுடெல்லி : தமிழகத்தின் திண்டிவனம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்குவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டும் ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிராக அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்னியர் அறக்கட்டளைகளின் தரப்பில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு எதிரான தமிழக அரசின் புதிய ஆணையை ரத்து செய்து கல்லூரிகளை தொடங்க அனுமதியளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண்மிஸ்ரா மற்றும் யுயு.லலித் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, “தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி அமைக்கும் விவகாரத்தில் எந்த ஆட்சேபணையும்  இல்லை என பார்கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தனியார் சட்டக்கல்லூரி அமைக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “திண்டிவனத்தில் தனியார் சட்டக் கல்லூரி தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. மேலும் இந்தாண்டு முதல் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகளுக்கான சட்டப்படிப்புகான மாணவர் சேர்க்கைகளையும் நடத்தலாம்’’ என உத்தரவிட்டனர்.

,

Advertisement