TODAY NEWS
Search

தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரம் முதல்வரின் முன்னாள் ஆலோசகர் வி கே ஜெயினிடம் மீண்டும் விசாரணை

,

புதுடெல்லி : முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நடந்த கூட்டத்தில்,  தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரத்தில், முதல்வர் கெஜ்ரிவாலின் முன்னாள் ஆலோசகர் வி கே ஜெயினிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் அன்ஷு பிரகாஷ் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு கூட்டத்தின் போது, பிரகாஷ் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக ஏஏபி எம்எல்ஏக்கள் பிரகாஷ் ஜார்வால் மற்றும் அமனதுல்லா கான் கைது செய்யப்பட்டனர். முதல்வர் முன்னிலையில் இந்த விவகாரம் நடந்திருந்தும், அவர் மன்னிப்பு கோராததால் உயர் அதிகாரிகள் முதல்வர் மற்றும் எம்ஏல்களுடனான தங்களது சந்திப்பை புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீசார், கடந்த பிப்ரவரி 23ம் தேதி, முதல்வரின் வீடு உள்ள சிவில் லைன்ஸ் பகுதி சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கை பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு அனுப்பியது. இதனிடையே, முதல்வரின் ஆலோசகராக இருந்த வி கே ஜெயின் கடந்த மார்ச் மாதம்,  பதவியை ராஜினாமா செய்தார். அவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், தலைமை செயலர் பிரகாஷை எம்எல்ஏக்கள் ஜார்வால் மற்றும் அமனதுல்லா கான் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். தற்போது கூட்டத்தில் கலந்து கொண்ட 11 எம்எல்ஏக்களுடன் விசாரணையை முடித்துள்ள டெல்லி போலீஸ், சில விவரங்களை தெளிவுப்படுத்திக்கொள்ள மீண்டும் கெஜ்ரிவாலின் முன்னால் ஆலோசகர் ஜெயினிடம் விசாரணை நடத்த உள்ளது.

,

Advertisement