TODAY NEWS
Search

துவாரகா செக்டார் 25 வரையிலான மெட்ரோ விரிவாக்க பணி தொடக்கம் : இரண்டரை ஆண்டுகளில் முடிவடையும்

,

புதுடெல்லி: துவாரகா செக்டார் 25 வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ள ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தின் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தொடங்கியது. புதுடெல்லி நிலையம் தொடங்கி துவாரகா செக்டார் 21 வரை ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடம் நீள்கிறது. துவாரகா செக்டார் 25ல் இப்போது கட்டப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான அதிநவீன கண்காட்சி மற்றும் வர்த்தக மையம் (இசிசி) வரை எக்ஸ்பிரஸ் மெட்ரோ நீட்டிக்கப்படும் என நிர்வாகம் முன்னதாக அறிவித்து இருந்தது. அறிவித்தபடி விரிவாக்கப் பணிகளை மெட்ரோ தொடங்கி உள்ளது. 1.7 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணி வரும் இரண்டரை ஆண்டுகளில் முடிவடையும் என மெட்ரோ செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:பிரகதி மைதானம், இந்தியா ஹேபிடேட் சென்டர் ஆகியவற்றை மிஞ்சும் வகையில் துவாரகா செக்டார் 25ல் கட்டப்பட்டு வரும் இசிசி வரை மெட்ரோவை விரிவாக்கம் செய்யும்படி, மத்திய அரசு கேட்டுக் கொண்டது. சுரங்க ஸ்டேஷனாக 310 கோடி மதிப்பீட்டில் செக்டார் 25 அமைக்கப்படுவதற்கான வரைவு கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதையடுத்து இறுதி கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி அறிவித்ததை அடுத்து, இப்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இசிசி வளாகத்தின் கீழே சுரங்க நிலையம் அமையும். அதற்காக பயணிகளுக்கு வசதியாக ரயில் நிலையத்தையும் இசிசியையும் இணைக்கும் சுரங்க வழிப்பாதை புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்படும். டெல்லியிலுள்ள மக்கள் இசிசிக்கு வந்து செல்வது ஸ்டேஷன் அமைந்த பின் மிகவும் எளிதாகும். இசிசிக்கு பார்வையாளர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தினமும் 55,000 எனும் இப்போதுள்ள மெட்ரோ பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும். இந்த வழித்தட பயன்பாட்டுக்கு என நிர்வாகம் சார்பில் 36 ரயில் பெட்டிகள் வாங்கப்பட உள்ளது.இவ்வாறு செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

,

Advertisement