போபால், சண்டிகருக்கு 2, 3ம் இடம் நாட்டின் மிக சுத்தமான நகரம் இந்தூர் : மத்திய அரசு ஆய்வில் தகவல்

,

புதுடெல்லி, மே 17: நாட்டின் மிக சுத்தமான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த பெருமையை அது பெற்றுள்ளது. மத்திய அரசு சார்பில் சுத்தமான நகரங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘சுவாஜ் சர்வேக்‌ஷான் 2018’ என்ற பெயரில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 430 நகரங்கள் பங்கேற்ற போட்டியில் இந்தூர் மிக சுத்தமான நகரமாக தேர்வு செய்யப்பட்டது. இந்தாண்டு 4,200 நகரங்கள் பங்கேற்ற போட்டியிலும் அதுவே முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற திட்டமிடல் இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நாட்டின் மிக சுத்தமான நகரம் என்ற பட்டியலில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடமும் அதே மாநிலத்தை சேர்ந்த போபால் நகருக்கு கிடைத்துள்ளது. 3வது இடம் சண்டிகருக்கு கிடைத்துள்ளது. தூய்மையை பராமரிப்பதில் முதல் மாநிலமாக ஜார்கண்டும், அதற்கு அடுத்த இடங்களை மகாராஷ்டிரா, சட்டீஸ்கரும்  பிடித்துள்ளன. மிக மோசமான நகரம் எது என்பது  விருது வழங்கும் நாளில் அறிவிக்கப்படும்’’ என்றார்.

,

Advertisement