மஜத-காங்கிரசை அழைப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை : காங்கிரஸ் கருத்து

,

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதை தவிர, ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு வேறு வழியில்லை’’ என காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணிக்கு 115 இடங்களுடன் பெரும்பான்மை உள்ளதால், அதற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கிறோம். அரசியல் சாசனப்படியும், சட்டப்படியும், இந்த கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. தனிப் பெரும் கட்சியாக உள்ளதால் நாங்கள்தான் ஆட்சி அமைக்க உரிமை கோருவோம் என பா.ஜ கூறுகிறது. இந்த முன்மாதிரியை கோவா, மணிப்பூர், மேகாலாய மாநிலங்களில் பா.ஜ தகர்த்துள்ளது. கோவாவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்றது. ஆனால் 12 இடங்களில் வென்ற பா.ஜ மற்ற கட்சிகளுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. மணிப்பூரில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜ 21 இடங்களிலும் வென்றது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியால் பா.ஜ ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. மேகாலயாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களிலும், பா.ஜ 2 இடங்களிலும் வென்றது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியால் ஆட்சி அமைக்க பா.ஜ.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி வாஜ்பாயை கூட்டணி ஆட்சி அமைக்க ஜனாதிபதி கே,ஆர்.நாராயணன் அழைப்பு விடுத்தார். இந்த முன்னுதாரணப்படியும், கட்சிகள் இணைந்து அதிக இடங்களை கைப்பற்றியிருந்தால் அந்த கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என்ற விதிப்படியும் எங்களது நடவடிக்கை நியாயமானதே. இவ்வாறு அவர் கூறினார்.

,

Advertisement