மத்திய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் வேலை நிறுத்த நோட்டீஸ்

,

* பிரச்னைகளை கண்டு பின்வாங்க மாட்டோம்* பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டிசென்னை: ரயில்வே துறையை தனியார்மயமாக்க நினைக்கும் மத்திய அரசின் போக்கை கண்டிக்கும் வகையில் உரிய முறையில் நோட்டீஸ் வழங்கி ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும். இதனால் எந்த பிரச்னை வந்தாலும் பின் வாங்க போவதில்லை என்று எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா நேற்று கூறினார். சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ) பொதுமகா சபை கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளராக கண்ணையா மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், தலைவராக ராஜா தர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மாநில துணைத்தலைவர்கள், துணை பொதுச்செயலாளர்கள், பொருளாளர்கள், கோட்ட தலைவர்கள், செயலாளர்கள் என புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் பொதுச்செயலாளர் கண்ணையாவுக்கும், தலைவர் ராஜா தருக்கும் எஸ்.ஆர்.எம்.யூவை சேர்ந்த தொழிலாளர்கள் ஆள் உயர அளவிற்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் பொதுச்செயலாளர் கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தை மாற்றி உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும்.  ரயில்வே பள்ளிகள் மூடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக மீண்டும் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. அதே போல், ரயில்வே மருத்துவமனைகளை தனியார் மயமாக்குவதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இது தொழிலாளர் நலனுக்கு எதிரானது. ரயில்வே துறையை தனியார்மயமாக்க நினைக்கும் மத்திய அரசின் தொடர்ச்சியான இந்த போக்கை கண்டிக்கும் வகையில் விரைவில் சட்டப்படி நோட்டீஸ் வழங்கி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக இதை தள்ளிவைக்கமாட்டோம். எந்த பிரச்னைகள் வந்தாலும் பின்வாங்கப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

,

Advertisement