TODAY NEWS
Search

மருத்துவ கல்வி இயக்குனராக எட்வின்ஜோ நியமித்தது எப்படி? விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

,

புதுடெல்லி: தமிழக மருத்துவ கல்வி இயக்குநராக எட்வின்ஜோ நியமிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின்ஜோ நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, கரூர் அரசு மருத்துவமனை டீன் ரேவதி கயிலைராஜன் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்தி தனி நீதிபதியிலான அமர்வு, எட்வின் ஜோ நியமனம் விதிப்படி நடைபெறவில்லை என தெரிவித்து அவரது நியமனத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து உத்தரவிட்டது.அதில்,” தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நியமன விவகாரத்தில் எட்வின்ஜோவை நியமித்தது செல்லும் என்றும், இதில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எட்வின் ஜோவின் பதவி விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகளின் உத்தரவிற்கு எதிராக மருத்துவர் மீனாட்சி சுந்தரம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 23ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,” தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோ தொடரலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் நியமன விதிகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு எட்வின் ஜோ அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என மனுவில் குறிப்பிட்டார். இந்த நிலையில் இதுவரை நிலுவையில் இருந்து வந்த மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவில்,” தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோ நியமிக்கப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவிற்கு தமிழக அரசு விரைவில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

,

Advertisement