TODAY NEWS
Search

மாநில அரசு சுய கவுரவம் பார்க்கக்கூடாது நிதி ஆணைய பரிந்துரை தொகையை மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டும்

,

புதுடெல்லி : நான்காவது டெல்லி நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ள ரொக்கத்தை அனுபவிக்க மாநகராட்சிகளுக்கு அடிப்படை உரிமை உள்ளது எனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், சுயகவுரவம் பார்க்காமல் நிதியை மாநகராட்சிகளுக்கு ஒதுக்கும்படி அரசுக்கு கண்டிப்பு தெரிவித்தது. மாநகராட்சிகள் நிதி பற்றாக்குறை விவகாரம் தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய ஒரு விசாரணையில் மாநகராட்சிகளுக்கு உடனே நிதி ஒதுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். எனினும், அரசு அதனை அலட்சியப்படுத்தி உள்ளது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் நிதி ஒதுக்கீடு செய்யாத அரசை எதிர்த்து மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் குவிந்தன. அவற்றை ஒரே மனுவாக ஏற்று நீதிபதிகள் நேற்று விசாரித்தனர்.அப்போது, அரசு சார்பில் ஆஜராகிய வக்கீல் கூறுகையில், ‘‘மாநகராட்சிகளுக்கு 4வது டெல்லி நிதி ஆணையத்தில் (டிஎப்சி) குறிப்பிடப்பட்ட் இருப்பதைக் காட்டிலும் அதிகமாகவே இந்த மாதம் ஒதுக்கி உள்ளோம். மேலும் மாநகராட்சிகளுக்கு இதுவரை 3,000 கோடி கடனும் வழங்கி உள்ளோம்’’, என்றார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மற்றும் வடக்கு மாநகராட்சி தரப்பு வக்கீல்கள் கூறுகையில், ‘‘அரசு வழங்கி உள்ளதாகக் கூறும் ரொக்கம், மாநகராட்சிகளுக்கு பற்றாக்குறையாகவே உள்ளது. மேலும் மாநகராட்சிகளுக்கு இவ்வளவு ரொக்கம் ஒதுக்கிட வேண்டும் எனும் 4வது டிஎப்சி பரிந்துரையை அரசு கருத்தில் கொள்ளாமல் ஏதோ ஒரு தொகையை வழங்கி உள்ளது’’, என குறை தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களுக்குப் பின் அரசுக்கு ரொக்கம் ஒதுக்க கெடு விதித்தும், கண்டிப்பு தெரிவித்தும் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: 4வது டிஎப்சி பரிந்துரையை மாநகராட்சிகள் அனுபவிக்க அடிப்படை  உரிமை பெற்றவை. எனவே, சுய கவுரவம் பார்க்காமல் மாநகராட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய பரிந்துரை தொகையை கிழக்கு மற்றும் வடக்கு மாநகராட்சிகளுக்கு அடுத்த 4 வாரத்தில் ஒதுக்கியே தீர வேண்டும்.சம்பளம் இல்லாமல் ஊழியர்களுக்கு பாதிக்கப்படுவது நேரடி விளைவு என்றாலும், உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படாததால் பல அடிப்படை உரிமைகளை மக்கள் இழக்க நேரிடுகிறது என்பது எதிர்மறை விளைவு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதில் சுயகவுரவம் என்பதனை அரசு சிறிதும் கருதக்கூடாது. அதோடு 5வது டிஎப்சி பரிந்துரை எப்போது அமல்படுத்தப்படும் என்பதை அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. மாநகராட்சிகளுக்கு 4வது மற்றும் 5வது டிஎப்சியை ஒதுக்கீடு செய்வதில் பின்பற்றப்படும் முறை என்ன என்பது பற்றி நீதிமன்றத்தில் தெளிவான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். ஒதுக்கீட்டுத் தொகை எப்படி கணக்கிடப்படுகிறது என்பதனையும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

,

Advertisement