TODAY NEWS
Search

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு

,

ஐதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  5 நாள் மாநாடு ஐதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் அரசியல் தீர்மான வரைவு அறிக்கையை சீதாராம் யெச்சூரி  தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தாக்கல்  செய்தார். அதில், ‘காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி இல்லாமல் அல்லது இணைந்து செயல்படாமல், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளை மார்க்சிஸ்ட் இணைக்க வேண்டும்’ என காரத் கூறியிருந்தார். பிறகு இதில் சிறு திருத்தம் செய்யப்பட்டு, ‘காங்கிரசுடன் அரசியல் கூட்டணி இல்லாமல், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்’ என மாற்றப்பட்டது. இந்நிலையில், இறுதிநாள் மாநாடு நேற்று நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு  நடந்தது. திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், செயலாளர் பி.வி.ராகவலு ஆகியோர் இந்த போட்டியில் இருந்தனர். ஆனால், சீதாராம் யெச்சூரி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு மார்க்சிஸ்ட்கட்சியின் மத்தியக் குழுவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 95 உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய யெச்சூரி, ‘‘இந்த மாநாட்டில் முக்கிய விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினோம். மார்க்சிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்த கட்சியாக உருவெடுத்துள்ளது’’ என்றார்.

,

Advertisement