TODAY NEWS
Search

முதல்வர், அமைச்சர்கள் என்னை அச்சுறுத்தினர் கெஜ்ரிவால் மீது ஆளுநர் பகீர் குற்றச்சாட்டு

,

புதுடெல்லி : காரணமற்ற தர்ணா மூலம் இருக்கையில் அமரும்படி முதல்வர் மற்றும் அவரது மூன்று அமைச்சர்கள் என்னை கட்டாயப்படுத்தியதோடு, உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பும்படி என்னை அச்சுறுத்தினர் என ஆளுநர் அனில் பைஜால் குற்றஞ்சாட்டினார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் கோபால் ராய் மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை அவரது அலுவகத்தில் சந்தித்தனர். அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் வீட்டில் தலைமை செயலர் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்டதாக எழுந்த புகார் முதல், அதிகாரிகளுக்கும் மாநில அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாகவும், போராட்டத்தை கைவிட்டு அதிகாரிகள் பணிக்கு திரும்ப அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும். மேலும் நிறுத்தி வைக்கப்பட்ட வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம் திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.இந்த கோரிக்கைகளை ஆளுநர் ஏற்க மறுத்ததால், முதல்வர் மற்றும் மூன்று அமைச்சர்கள் வரவேற்பு அறையில் அமர்ந்து, காரணமற்ற தர்ணாவில் ஈடுபட்டதோடு, ஆளுநருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுநரை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் மூன்று அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் போராட்டத்தை விடுத்து பணிக்கு திரும்ப சம்மன் அனுப்பும்படியும் வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம் திட்டத்துக்கு அனுமதி வழங்கும்படியும் ஆளுநரை வலியுறுத்தினர். அப்போது, ராஜ் நிவாஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை, முதல்வர் நம்பகமான சூழலை அதிகாரிகளுக்கு உருவாக்கி பயத்தை நீக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். எனினும் இதனை ஏற்க மறுத்த முதல்வர் மற்றும் மூன்று அமைச்சர்கள் மூன்று கோரிக்கைகளுக்கும் உடனடி ஒப்புதல் அளிக்கும்படி அந்த அறையிலேயே ஆளுநரை அமர வைத்து காரணமற்ற தர்ணாவில் ஈடுபட்டனர். ரேஷன் பொருள் விநியோகம் திட்டம் கூட அமைச்சர் இம்ரான் ஹுசேன் டேபிளில் தான் காத்திருக்கிறது. மத்திய அரசின் முன் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது. எனினும் முன்பே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்கான நேரம் வந்ததும், ஆளுநர் தனது அலுவலகத்திலிருந்து வெளியேறினார்’. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. முதல்வர் டிவிட் பதிவு: முன்னதாக காத்திருப்பு அறையில் இருந்தபடி மாலை 6 மணிக்கு முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது: மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநருக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் புகார் மனு மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின், முன்குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான நேரம் வந்ததும், முதல்வர் மற்றும் மூன்று அமைச்சர்கள் காத்திருக்கின்றனர் என தெரிந்தும் அவர் செயலகத்தை விட்டு சென்றுவிட்டார்.

,

Advertisement