TODAY NEWS
Search

மூன்று மாதமாக வேலைநிறுத்தமா? கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு : அதிகாரிகள் சங்கம் மறுப்பு

,

புதுடெல்லி : அரசு அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்த கருத்தை அதிகாரிகள் சங்கம் மறுத்துள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தெரிவிக்கையில், பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய அரசு சேர்ந்து துணைநிலை ஆளுநர். ஐஏஎஸ் அதிகாரிகள், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் டெல்லி போலீஸ் ஆகியவற்றின் மூலம் டெல்லி மாநில அரசின் செயல்பாடுகளை முடக்கி வருகிறது. மேலும், கடந்த நான்கு மாதங்களாக ஆம் ஆத்மி அமைச்சர்களின் ஆலோசனை கூட்டங்களை டெல்லி மாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.குறிப்பாக, தலைமை செயலாளர் தாக்கப்பட்டதாக எழுந்த சம்பவத்திற்கு பின் இதுபோன்ற நிலையை அரசு அதிகாரிகள் எடுத்துள்ளதோடு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகின்றனர் என கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார். அதோடு, தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தாம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கோரப்படுகிறது. எதற்காக மன்னிப்பு ? அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுக்கு மன்னிப்பா? எனவும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டுக்களை அதிகாரிகள் சங்கம் மறுத்துள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் முழு வீச்சில் தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.உண்மையில் பல நேரங்களில் விடுமுறை நாட்களில் கூட பணியை தொடர்ந்து வருகின்றனர். தலைமை செயலாளர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, அதிகாரிகள் தங்கள் உடல்நலம் மற்றும்  பாதுகாப்பைப் பற்றியும் தான் கவலைப்படுகிறார்கள். தங்கள் கவுரவத்தையும்,  மரியாதையையும் பற்றிம் தான்  கவலைப்படுகின்றனர். பல அமைச்சர்கள் தொடர்ந்து  அச்சுறுத்தல், மிரட்டல் விடுப்பதும், மோசமாக திட்டுவது பற்றியும் கவலைப்படுகின்றனர்.இது சம்பந்தமாக  அதிகாரிகள் அனைத்து அமைச்சரவை கூட்டங்களுக்கும், சட்டபூர்வ  கூட்டங்களுக்கும் பொது மக்களை பாதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் கூட்டங்களுக்கும் வருகை தருகிறார்கள். மேலும், சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான தரவுகளை தெரிவிப்பது தொடர்பாகவும் தொடர்ந்து அதிகாரிகள் அமைச்சர்களை தவறாமல் சந்தித்து வருகின்றனர்.  உண்மையில், அதிகாரிகள்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தால், ஆண்டு வரவு-செலவுத் திட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்காது. பட்ஜெட் தொடரும் நடைபெற்று இருக்காது. “வியாபார பரிவர்த்தனையின் விதி 17 ன் கீழ், அந்தந்த துறைகளால் மேற்கொள்ளப்படும் முக்கியமான விவரங்கள் குறித்தும் அமைச்சர்களிடம் வாராந்திர அறிக்கையாக அதிகாரிகள் சமர்பித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

,

Advertisement