மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் : திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி ; பாஜவுக்கு 2வது இடம்

,

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு  எண்ணிக்கையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை  கைப்பற்றியுள்ளது.  பாஜவுக்கு  2வது இடம் கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 14ம் தேதி உள்ளாட்சி  தேர்தல் நடைபெற்றது. அப்போது  ஏற்பட்ட வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டனர்.  621 ஜில்லா பரிஷத், 6123 பஞ்சாயத்து சமிதி, 31,802 கிராம  பஞ்சாயத்துக்களுக்கு நடைபெற்ற  தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று  நடைபெற்றது. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 28,456  கிராம பஞ்சாயத்துக்களில் ஆளும் திரிணாமுல்  காங்கிரஸ் 19,394 இடங்களை  கைப்பற்றியது. 4144 இடங்களை கைப்பற்றி பாஜ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மார்க்சிஸ்ட் 1076 இடங்களை  கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 681  சீட்டுகளில் வென்றுள்ளது. சிபிஐ 28 இடங்களிலும், சுயேச்சைகள் உள்பட மற்றவர்கள் 1335  கிராம பஞ்சாயத்துகளை  கைப்பற்றியுள்ளனர். இது  தவிர பஞ்சாயத்து சமிதி தேர்தலில் மொத்தமுள்ள 2,085 இடங்களில் 1842 இடங்களில் திரிணாமுல் வெற்றி  பெற்றுள்ளது. இதேபோல் மாவட்ட சபை எனப்படும்  ஜில்லா பரிஷத்களில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் ஆளும் திரிணாமுல் 10 இடங்களை  வென்றுள்ளது.  முர்ஜிதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராம  பஞ்சாயத்துக்களில் 466 இடங்களை திரிணாமுல் கைப்பற்றியுள்ள நிலையில்,  83   இடங்களை கைப்பற்றி காங்கிரசுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. சிபிஎம்முக்கு  48 இடங்களும், பாஜவுக்கு 24 இடங்களும் இங்கு கிடைத்துள்ளது. 24 தெற்கு  பர்கானா மாவட்டத்தில் 1028 கிராம பஞ்சாயத்துக்களை  திரிணாமுல்  கைப்பற்றியுள்ளது. பாஜ 117 இடங்களுடனும், சிபிஎம் 72 இடங்களுடனும்,  காங்கிரஸ் 16 இடங்களுடனும் அடுத்தடுத்த இடங்களை இங்கு  கைப்பற்றியுள்ளது.  கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 1075 கிராமபஞ்சாயத்துக்களை திரிணாமுல்  கைப்பற்றியுள்ளது. பாஜவுக்கு 74, சிபிஎம்முக்கு 55,  காங்கிரசுக்கு 5  இடங்கள் கிடைத்துள்ளன.

,

Advertisement