TODAY NEWS
Search

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து

,

புதுடெல்லி  : தென்கிழக்கு டெல்லியின் கலின்தி கன்ஜ் பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் அதிகாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 200-க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்தனர். ரோஹிங்கியா என்னும் இன முஸ்லிம் மக்கள் பல நுாற்றாண்டுகளாக மியான்மரில் வசித்து வருகின்றனர். கடந்த 1982ம் ஆண்டு முதல் மியான்மரில் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதால் அவர்கள் தங்களுகு என தனி தேசம் இல்லாமல் பல நாடுகளில் தஞ்சம் புகுந்து அகதிகளாக வசித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள கலின்தி கன்ஜ் பகுதியில் அவர்களுக்கான அகதிகள் முகாம் உள்ளது. இங்கு பல நுாறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் மின் வயரில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக குடிசைகளில் தீ பற்றியது. பின்னர் மளமளவென பரவிய தீ அங்கிருந்த குடிசைகள் முழுவதிலும் பரவியது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து போலீசாரும் தீயணைக்கும் முயற்சியில் பங்கு கொண்டனர். அவர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 44 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.பின்னர்  அகதிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் பற்றி புலன் விசாரணை நடந்து வருகிறது.

,

Advertisement