வாருங்கள் வெளியே இறங்கி விளையாடுங்கள்’ கர்நாடக எம்எல்ஏக்களுக்கு வலைவிரிக்கும் கேரள சுற்றுலாத்துறை : ருசிகர டிவிட்டர் பதிவால் பரபரப்பு

,

திருவனந்தபுரம்: கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பரபரப்பான சூழ்நிலையில், அம்மாநிலத்தில் புதிதாக தேர்வான எம்எல்ஏக்களை கேரளாவில் வந்து ஓய்வெடுக்குமாறு கூறி கேரள சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் தேசிய அரசியலே தற்போது கர்நாடகா மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக எம்எல்ஏக்களை கொண்ட பாஜ கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.வழக்கமாக இதுபோன்ற சூழ்நிலையில், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடப்பது உண்டு. எம்எல்ஏக்கள் கட்சி தாவாமல் இருப்பதற்காக அந்தந்த கட்சிகள் தங்களது எம்எல்ஏக்களை வெளிமாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது வழக்கம். சமீபத்தில் தமிழகத்திலும், குஜராத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. அதேபோல தற்போதைய சூழ்நிலையில் கர்நாடக எம்எல்ஏக்களுக்கும் இதேநிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.இந்த சூழ்நிலையில் கேரள சுற்றுலா துறை, கர்நாடக எம்எல்ஏக்களுக்கு வலை வீசியுள்ளது. இது ெதாடர்பாக கேரள சுற்றுலாத்துறையின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று ருசிகரமான வாசகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில், ‘தற்போது உங்கள் மனது படபப்பாக காணப்படும். உங்கள் மனதை எளிதாக்கவும், டென்ஷனை குறைக்கவும் தெய்வத்தின் சொந்த நாடான கேரளாவுக்கு வாருங்கள். எங்களது மாநிலத்தில் உங்கள் மனதை குளிர்விக்கும் வகையில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. இயற்கை சூழல் மற்றும் பாதுகாப்புடன் கூடிய ஏராளமான விடுதிகள் உள்ளன. வாருங்கள், வெளியே இறங்கி விளையாடுங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள சுற்றுலாத்துறையின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

,

Advertisement