TODAY NEWS
Search

விராட் கோலியின் டிவிட்டர் சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார் மோடி

,

புதுடெல்லி:  கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தியானம், நடைபயிற்சி மேற்கொள்ளும் தனது காலை நேர உடற்பயிற்சி வீடியோவை டிவிட்டரில் நேற்று வெளியிட்டார். கடந்த மே மாதம் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவர் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி, தனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரின் பெயர்களை இணைத்து பிட்னஸ் சவால் விடுத்திருந்தார். விராட் கோலியின் இந்த சவாலை ஏற்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, “உங்களது சவாலை ஏற்கிறேன் விராட்.  விரைவில் எனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுகிறேன்” என பதிலளித்து இருந்தார். விராட் கோலியின் பிட்னஸ் சவாலை ஏற்று சுமார் ஒரு மாதம் கடந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று டிவிட்டர் பக்கத்தில், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவை வெளியிட்டார். ‘‘யோகாவை தவிர நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் உணரும் காலை நடைபயிற்சி. இது மிகவும் புத்துணர்ச்சி, உற்சாகமாக உள்ளது. நான் மூச்சு பயிற்சியும் செய்கிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.  கர்நாடக முதல்வர் குமாராசாமி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார். சுமார் ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த வீடியோ காட்சியில், மோடி கருப்பு நிற ஜாக்கிங் உடை அணிந்து உடற்பயிற்சி செய்கிறார். புல்வெளியில் நடத்தல், பாறை மீது படுத்து பயிற்சி செய்தல், குறுகலான மற்றும் வட்ட வடிவிலான பாதையில் நடத்தல் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது.விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் பிரதமர் மோடி உடற்பயிற்சியில்  கவனம் செலுத்தி வருகிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

,

Advertisement