10ம் வகுப்பில் மகன் தோல்வி : விருந்து வைத்து தந்தை கொண்டாட்டம்

,

போபால்: மத்தியப் பிரதேசத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் மகன் தோல்வியடைந்த நிலையில் உறவினர்களுக்கு விருந்து வைத்து தந்தை  கொண்டாடியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேந்திர குமார் வியாஸ். சிவில் காண்ட்ராக்டர். இவரது மகன்  10ம்  வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தான். கடந்த திங்களன்று பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் சுரேந்திரகுமாரின் மகன் ஆசு  தோல்வியடைந்தார். 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தன்னை கடிந்து கொள்வார் என்று ஆசு அச்சத்தில் இருந்தான். ஆனால் அவரது தந்தையின் நடவடிக்கை வேறுவிதமாக இருந்தது. அவர் தனது உறவினர்களை வீட்டிற்கு அழைத்திருந்தார். வீட்டிற்கு வந்த  பின்னர்தான் சுரேந்திர குமார், மகனுக்காக விருந்து கொடுக்க அழைத்திருந்தது தெரியவந்தது. வீட்டிற்கு வந்தவர்களுக்கு அவர் தடபுடலாக விருந்து  வழங்கி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அப்போது மகன் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டானே. உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்று அனைவரும்  கேள்வி எழுப்பினார்கள். அப்போது சுரேந்திர கமார் கூறுகையில், “நான் எனது மகனை ஊக்கப்படுத்துவதற்கு விரும்பினேன். தேர்வில் தோல்வியடைந்தால் மாணவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற மாணவர்களுக்கு  இது கடைசி தேர்வு கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று நான் அறிவுரை கூறுகிறேன். எனது மகன் அடுத்த ஆண்டு தேர்வில்  மீண்டும் பங்கேற்பான். கடினமாக உழைத்து அதிக மதிப்பெண்கள் பெற்றுதேர்ச்சி அடைவான்” என்றார். தேர்வில் தோல்வியடைந்த ஆசு கூறுகையில்,  “நான் எனது தந்தையை மிகவும் விரும்புகிறேன். நான் கஷ்டப்பட்டு படித்து மீண்டும் தேர்ச்சி அடைவேன் என எனது தந்தைக்கு வாக்கு தருகிறேன்”  என்றார். சுரேந்திர குமாரின் இந்த நடவடிக்கை தேர்வில் தங்கள் பிள்ளைகள் தோல்வியடைந்ததால் விரக்தியில் இருக்கும் பெற்றோருக்கு ஒரு  எடுத்துக்காட்டாகும்.

,

Advertisement