TODAY NEWS
Search

2020 முதல் 2025ம் ஆண்டு வரை உள்நாட்டு பாதுகாப்புக்கு ₹3.5 லட்சம் கோடி தேவை: நிதி ஆணையத்திடம் உள்துறை தகவல்

,

புதுடெல்லி : வரும் 2020ம் ஆண்டு முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3.5 லட்சம் கோடி  தேவைப்படுவதாக நிதி ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் 15வது நிதிக்குழுவை அமைக்க கடந்த நவம்பரில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இக்குழு செயல்பட உள்ளது. இதன் தலைவராக என்.கே. சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 2020-25ம் ஆண்டிற்கான பரிந்துரைகளை 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் நிதி ஆணையம் அளிக்க வேண்டும்.இந்நிலையில், 2020-25 வரையிலான 5 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3,50,000 கோடி தேவைப்படுவதாக நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே.சிங்கிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி ஆணைய தலைவர் என்.கே. சிங்கை சமீபத்தில் சந்தித்து 2020-25ம் ஆண்டுக்கான உள்துறை அமைச்சக நிதி தேவை பற்றி பேசினார். அப்போது அவரிடம், ‘தீவிரவாத அச்சுறுத்தல், சர்வதேச அளவில் தொடர்புகளை கொண்ட தீவிரவாத அமைப்புகள் போன்றவற்றை மாநில அரசு தனியாக எதிர்கொள்ள முடியாது. எனவே, உள்நாட்டு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மக்களிடம் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பை அளித்தல், காவல்துறையை மேம்படுத்துதல், சைபர் குற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல், இயற்கை பேரழிவுகளின்போது உடனடி நிவாரணத்தை வழங்குவதல் உள்ளிட்ட சவால்களை உள்துறை அமைச்சகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது’ என்று ராஜ்நாத் சிங் எடுத்துக் கூறினார்.மேலும், ‘மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள கடலோர பாதுகாப்பு, எல்லை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும் அதிக நிதித்தேவை உள்ளது. மொத்தமாக ஐந்தாண்டுகளுக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக தேவைப்படும்’ என சிங்கிடம் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  இது பற்றிய  விரிவான அறிக்கை நிதி ஆணையத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

,

Advertisement